மம்முட்டியின் ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடலுக்கு முன்னோடியாக அமைந்த ஹலோ ஹலோ சுகமா
அழகனில் மம்முட்டியும், பானுப்ரியாவும் காதலில் விழுந்ததும் மணிக்கணக்கில் போனில் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில், சங்கீத ஸ்வரங்கள் பாடல் ஒலிக்கும். பலரது ஆல்டைம் பேவரைட் பாடல் அது. அந்தப் பாடல் முழுக்க மம்முட்டியும், பானுப்ரியாவும் போனில் பேசிக் கொண்டிருப்பார்கள்.
1956 இல் தாய்க்குப்பின் தாரம் படத்தை தயாரித்து திரையுலகில் தயாரிப்பாளராக அடியொடுத்து வைத்தார் சாண்டோ சின்னப்ப தேவர். ஹீரோ எம்ஜிஆர். இயக்கம் தேவரின் இளைய தம்பி எம்.ஏ.திருமுகம். முல் படத்திலேயே தேவருக்கு எம்ஜிஆர் மற்றும் தம்பியுடன் முறுக்கிக் கொண்டது. அடுத்தடுத்தப் படங்களை இவர்கள் இருவரும் இல்லாமல் எடுத்தார். 1958 இல் தயாரித்த அவரது மூன்றாவது படம் செங்கோட்டை சிங்கத்தில் முதன்முறையாக சரோஜாதேவி நடித்தார். அதற்கடுத்தப் படத்தில் தம்பி மீண்டும் தேவருடன் சேர்ந்து கொண்டார்
பிடிக்காவிட்டால் வெறுத்துக் கொல்வது, பிடித்துவிட்டால் நேசித்து கொல்வது என்று ஒரு வழக்கு உண்டு. தேவர் அந்த டைப். சரோஜாதேவி அவருக்குப் பிடித்துப்போக தொடர்ச்சியாக அவரை தனது படங்களில் பயன்படுத்தினார். 1961 இல் மீண்டும் எம்ஜிஆருடன் இணைந்து தாய் சொல்லைத் தட்டாதே படத்தை எடுத்த போது சரோஜாதேவிதான் நாயகி. அதற்கடுத்து தொடர்ச்சியாக எம்ஜிஆர் – சரோஜாதேவி காம்பினேஷனில் தாயை காத்த தனயன், குடும்பத் தலைவன், தர்மம் தலைகாக்கும் படங்களை எடுத்தார் எல்லாமே ஹிட். இதில் தர்மம் தலைகாக்கும் 1963 இல் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம் என பெயர் பெற்றது.
தர்மம் தலைகாக்கும் படத்தில் இலவசமாக மருத்துவம் பார்க்கும் டாக்டராக எம்ஜிஆர் நடித்தார். ஆனால், பாதி நேரம் முகமூடி அணிந்த ஒரு கிரிமினலை தேடிக் கொண்டிருப்பார். மீதி நேரம் சரோஜாதேவியுடன் காதல், டூயட் என்று போகும். சரோஜாதேவி எம்.ஆர்.ராதாவின் மகள். அவரது நண்பர் வி.கே.ராமசாமி. இருவருமே பணக்காரர்கள். வி.கே.ராமசாமியிடம் கணக்கராக வேலைக்கு சேரும் அசோகனின் தங்கையின் மீது எம்.ஆர்.ராதா மையல் கொள்வார். அசோகனுக்கு தனது மகள் சரோஜாதேவியை அவரது விருப்பத்துக்கு மாறாக மணம் முடிக்க ஏற்பாடு செய்வார். கொலை கொள்ளைகள் நடத்திவந்த முகமூடி திருடனை எம்ஜிஆர் பிடித்தாரா, சரோஜாதேவியுடன் இணைந்தாரா என்பது கதை.
படம் ஆரம்பிக்கும் போதே கிளைமாக்ஸ்வரை தெரிந்துவிடும். அத்தனை பழைமையான கதை. எனினும் ரசிகர்களுக்கு போரடிக்காமல் திரைக்கதையை நகர்த்திய விதத்தில் ஜெயித்திருந்தார்கள். படத்தின் கதை, வசனத்தை அய்யாப்பிள்ளை எழுத, எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு பெரும் துணையாக இருந்தது கே.வி.மகாதேவனின் இசையும், பாடல்களும். ஆரம்பத்தில் மூகமூடித் திருடன் தனது ஆள்களுடன் நடத்தும் திருட்டையும், கொலையையும் அதிக பின்னணி இசை இல்லாமல் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியிருந்தனர்
பாடல்களில் தர்மம் தலைகாக்க்கும், ஹலோ ஹலோ சுகமா, தொட்டுவிட தொட்டுவிட., ஒருவன் மனது… ஆகியவை இன்ஸ்டன்ட் ஹிட்டாயின. ஹலோ ஹலோ பாடலை எம்ஜிஆரும், சரோஜாதேவியும் தொலைபேசியில் பாடுவார்கள். முழுப்பாடலையும் தொலைபேசியில் பாடுவதாக அதற்கு முன் எந்தப் பாடலும் வந்ததில்லை. இதற்கு இணையாக பாலசந்தரின் அழகன் படப்பாடலை சொல்லலாம்.

அழகனில் மம்முட்டியும், பானுப்ரியாவும் காதலில் விழுந்ததும் மணிக்கணக்கில் போனில் பேச ஆரம்பிப்பார்கள். பின்னணியில், சங்கீத ஸ்வரங்கள் பாடல் ஒலிக்கும். பலரது ஆல்டைம் பேவரைட் பாடல் அது. அந்தப் பாடல் முழுக்க மம்முட்டியும், பானுப்ரியாவும் போனில் பேசிக் கொண்டிருப்பார்கள். பகலில் ஆரம்பிக்கும் பேச்சு விடிய விடிய தொடரும். வாகனப் போக்குவரத்து நின்று சாலைகள் வெறிச்சோடிப் போவது, துர்தர்ஷனில் ஒலிபரப்பு நிறைவடைந்து, கலர் பாருக்கு தொலைக்காட்சி மாறுவது, மெல்ல விடிவது என அனைத்தையும் அழகுற கேமராவில் அள்ளிச் சுருட்டியிருப்பார். தமிழின் சிறந்தப் பாடல் காட்சிகளில் அதுவும் ஒன்று.
தர்மம் தலைகாக்கும் பாடலுக்கும், அழகன் பாடலுக்கும் உள்ள வித்தியாசம், எம்ஜிஆரும், சரோஜாதேவியும் தொலைபேசியில் ஹலோ ஹலோ சுகமா பாடலை பாடுவார்கள், அழகனில் இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, பின்னணியில் பாடல் ஒலிக்கும். இரண்டிலும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதுதான் முழுப்பாடலிலும் வரும்.