சினிமா

இந்த படத்தின் எந்த ஃப்ரேம் அல்லது மேக்கிங் வீடியோவை பார்த்தாலும் பிரதானமாக எனக்கு தெரிவது வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை பாகம் 1’ படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.

படத்தின் வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து படக்குழுவினர் சக்சஸ் மீட் நடத்தினர். இவ்விழாவில் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த படம் ரிலீஸ் அன்று காலை ஒரு ஏழரை எட்டு மணிக்கு வெற்றிமாறன் சார் போன் பண்ணார். எல்லா டார்ச்சரையும் பொறுத்துக்கிட்டு நடித்ததற்கு நன்றி என்றார். படத்தினுடைய ரிசல்ட் அமெரிக்காவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் படம் பிடித்து இருக்கிறது என்றார். நான் கடைசியாக எப்போது இது மாதிரியான போனை ரிசீவ் செய்தேன் என்று எனக்கே ஒரு சந்தேகம். இந்த படத்தின் எந்த ஃப்ரேம் அல்லது மேக்கிங் வீடியோவை பார்த்தாலும் பிரதானமாக எனக்கு தெரிவது வெற்றிமாறன் சார் தான். ஒரு களிமண்ணு மாறி தான் அவர்கிட்ட போனேன்.

ஒரு கதையை வார்த்தைகளால் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியுமா என்பது தெரியவில்லை. மொழி என்பது ரொம்ப லேட்டாக கண்டுபிடிக்கப்பட்டது தான். அதற்கு முன்பு உணர்வுகள் தான். அதனால் அவருடைய உணர்வுகளை வைத்துத் தான் புரிந்து நடிப்பேன். இப்படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்து தொடங்கியது தான். பொதுவாக யானைகள் பணிவாக இருக்கும் போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதுபோல் பிரம்மாண்டமாகத்தான் எனக்கு அவர் தெரிகிறார். நல்ல வேலை நான் பெண்ணாகப் பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அவரை உஷார் பண்ணியிருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போது பேசும் போது கூட அவரை பார்த்து பேசமுடியவில்லை. கூச்சமாக இருக்கும். எப்போதுமே சரி, ஒரு வேலை சரக்கு அடிச்சிட்டு போதையில் பேசும்போது கூட மரியாதையாகத் தான் பேசுவேன். அவர் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன். என்னுடைய சிந்தனை நிலைதடுமாறினாலும் அவருக்கு மரியாதை நிலைதடுமாறியதில்லை” என்றார்.

நன்றி: நக்கீரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button