அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

எம்ஜிஆர் மீது ரசிகர்களும் அடித்தட்டு மக்களும் தங்கள் உயிரையே வைத்திருந்தனர். இது ஏதோ கண்மூடித்தனமான பக்தியால் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. அந்த அளவுக்கு ரசிகர்களையும் சாதாரண மக்களையும் எம்.ஜி.ஆர். நேசித்தார். சில நேரங்களில் அவர்கள் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டாலும் அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக் கொள்வார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் முகத் துவார பகுதியில் எடுக்கப்பட்டன. அது வரை எந்தப் படங்களிலும் இடம்பெறாத அபூர்வ லொகேஷன் அது. அதேநேரம், மனித நடமாட்டத்தை அதிகம் பார்க்க முடியாத, மீனவர்களேகூட அப்போது போக அஞ்சிய இடம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து அங்கும் மக்கள் வந்துவிட்டனர்.
அந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். மாறு வேடத்தில் இருப்பார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர் கள் எம்.ஜி.ஆரை காண வேண்டும் என்ற ஆவலில் தண்ணீரில் குதித்து நீந்தி அவர் இருந்த இடத்துக்கு வந்துவிட்டனர். அந்த இளைஞர்களை அழைத்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் நலம் விசாரித்தார். அப் போது, ஒரு இளைஞர் எதிர்பாராமல் எம்.ஜி.ஆரை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அந்த இளைஞரின் அன்பை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.
அந்தப் புகைப்படம்தான் எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது! எம்.ஜி.ஆரை முத்தமிடும் இளைஞரின் முகமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஆழமாக தன் முத்தத்தை பதிக்கிறார். அருகில் நிற்கும் இளைஞர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பரவசததில் கும்பிட்ட கையை கீழிறக்காமல் சிரித்தபடி அவரை பார்த்துக் கொண்டே நிற்கிறார். நீரில் நீந்தி வந்த தன் அடையாளமாக அவர் அணிந்துள்ள டிராயர் தண்ணீரில் நனைந்து உடலோடு ஒட்டியுள்ளது. முத்தமிடும் ரசிகரை அணைத்தபடி அவரது அன்பு மழையில் திளைக்கும் எம்.ஜி.ஆரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம். அன்பு மனங்களின் சந்திப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி; பார்ப்பவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
– தி இந்து .