காலத்தால் அழியாத ‘காலங்களில் அவள் வசந்தம்

பள்ளி நாட்களில் இருந்தே முகமது ரபி குரல் மீது குறையாத காதல் கொண்டு வளர்ந்த பி.பி.ஸ்ரீனிவாஸ், பட்டப்படிப்புக்குப் பிறகு இசைதான் தமக்கேற்ற உலகம் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், பி.பி.ஸ்ரீனிவாஸின் முடிவு சரிதானா?. இசைத்துறையில் ஸ்ரீனிவாஸால் சாதிக்க முடியுமா?. என ஒரு ஜோசியரிடம் பி.பி. ஸ்ரீனிவாஸின் தந்தை கேட்க, இசைத்துறையில் பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு எதிர்காலமே இல்லை என ஜோசியர் பதிலளித்தாராம். இந்த ஜோசியம் பலிக்காமல் போனது. பகல் கனவாய் ஆனது. அதனால் ரசிகர்களுக்குக் கிடைத்த இவரின் இசை விருந்து தெவிட்டாத தேனானது.
ஸ்ரீனிவாஸின் திரை இசை வாழ்க்கை 1951-ல் தொடங்கியது. அப்போது வெளிவந்த மிஸ்டர் சம்பத் என்ற இந்திப் படத்தில்தான் ஸ்ரீனிவாஸின் கானம் ஒலித்தது. காற்றைக் கிழித்தது. ”சிந்தனை என் செல்வமே” என்ற இவரது முதல் தமிழ்ப் பாடல் 1953-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘ஜாதகம்’. இசைத்துறையில் பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு எதிர்காலமே இல்லை என்று சொன்ன ஜோசியம் பலிக்கவில்லை. ஆனால், ஜாதகம் பலித்தது. திரை இசைத்துறையில் தித்திக்கும் பல பாடல்களைத் தரத் தொடங்கினார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
தமிழ்த் திரையிசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழ் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியைக் கொண்டுவந்தவர், பி.பி. ஸ்ரீனிவாஸ்.
காலத்தால் அழியாத ‘காலங்களில் அவள் வசந்தம்’ எனும் காவியப் பாடல் உட்பட பல பாடல்கள், பி.பி. ஸ்ரீனிவாஸின் வசந்த குரலால் வான்புகழை எட்டின. ஏ.எம்.ராஜாவுக்குப் பிறகு, காதல் மன்னன் ஜெமினி கணேசனின் குரலாகவே ஒலித்த பி.பி.ஸ்ரீனிவாஸ், அவருக்காகப் பாடிய பல பாடல்கள். சுவை தரும் பலாப் பாடல்கள்.
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள், மயக்கமா கலக்கமா, பால் வண்ணம் பருவம் கண்டு, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, சின்ன சின்ன ரோஜா, சின்ன சின்ன கண்ணனுக்கு, நீயோ நானோ யார் நிலவே, நெஞ்சம் மறப்பதில்லை, நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், புரியாது, வாழ்க்கையின் ரகசியம் புரியாது, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற ஸ்ரீனிவாஸ் பாடல்களை நெஞ்சம் மறக்குமா?
தனது குரலால், காற்று மண்டலத்தையே இனிப்பாக்கி வைத்திருந்த பி.பி.ஸ்ரீனிவாஸிடமிருந்து, 2013-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி, அவரது சுவாசக் காற்று விடை பெற்றது.
– தி இந்து.