விவேக் இரண்டம் ஆண்டு நினைவு நாளின்று

ஆக்டர் விவேக் இரண்டம் ஆண்டு நினைவு நாளின்று
நகைச்சுவையை ஆயுதமாகக் கொண்டு சமூக விழிப்புணர்வு கருத்துகளை மக்கள் மனதில் ஆழமாக விதைத்தவர் நடிகர் விவேக் என்றால் அது மிகையல்ல. சொல்ல வேண்டிய கருத்துகளை முகத்தில் அறைவது போல சொல்லிவிடலாம். அதனை நகைச்சுவை என்ற தேன் தடவி மக்கள் மனதில் அழுத்தமாக பதியவைத்துவிடலாம் என்பதற்கு உதாரணம், நடிகர் விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள். சாதிக்கொடுமைக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் சாட்டையடிகளாக சுழன்றன அவரது காமெடி வசனங்கள்.
பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதையும், பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கத்தையும் சாடின அவரது நடிப்பும், வசனங்களும்.
கூவத்தில் குளித்து எழும் காட்சிகளாலும், 100 பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது என்ற மூட நம்பிக்கைகளை சிதறடித்த காட்சிகளாலும் என்றென்றும் நினைவில் நிற்பவர்.
என்எஸ் கிருஷ்ணன் தனது நகைச்சுவைக் கருத்துகளால் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நிலையில், அவரது பாணியை பின்பற்றியதால் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்பட்டார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி அரசின் விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலமாகவும் மனதை தொட்டவர் விவேக். பிளாஸ்டிக் இல்லா தமிழகம், கொரோனா விழிப்புணர்வு என பல அரசு விளம்பரங்களில் தோன்றியவர்.
திரையரங்குக்கு வருவோரை சிரிக்க மட்டும் வைக்காமல், சிந்திக்கவும் வைத்து அனுப்பியதால்தான் அவர் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படுகிறார். எண்ணற்ற மக்களை சிரிக்க வைத்து கவலைகளை மறக்க வைத்த இந்த மக்களின் கலைஞன் காலமாகி இன்றும் இரண்டாண்டுகள் ஆகிறது
From The desk of கட்டிங் கண்ணையா!