சினிமா

இளையராஜா – வைரமுத்து இணைய வேண்டும்!

இளையராஜா – வைரமுத்து இணைய வேண்டும்!’ – இது, தமிழர்களின் நிரந்தரப் பேராசை

விகடன் டீம்

இளையராஜா – வைரமுத்து கூட்டணியில் இணையற்ற இரு படப்பாடல்கள் ஆல்பம் என்றால் ‘சிந்துபைரவி’யையும் ‘முதல்மரியாதை’யையும் சொல்லலாம். ஒருவரிக்கதையாகச் சொன்னால் ஓர் ஆணின் குடும்ப உறவுக்கு வெளியே இன்னொரு பெண்ணுடனான நேசம் என்பது இரு படங்களுக்கும் பொது. ‘சிந்துபைரவி’யில் கர்னாடக இசைக்கலைஞன்; ‘முதல் மரியாதை’யிலோ கிராமத்துப் பெரிய மனிதர். கர்னாடக இசைக்கலைஞரின் கலைக்கர்வம், பெண்ணுடனான காதல், வீழ்ச்சி, மீண்டும் எழுச்சி ஆகியவற்றை உணர்ந்து கொள்ள படம் பார்க்க வேண்டியதில்லை; பாடல்களைக் கேட்டாலே போதும்.

‘அம்மி அரைச்சவ கும்மி அடிச்சவ நாட்டுப்புறத்தில சொன்னதப்பா’ என்று தமிழிசைக்கு ஆதரவாக எழும் சிந்துவின் குரல், ‘என்னைப் பார்த்து கோப்பை தள்ளாடும்’ என்ற போதையாட்டப் பாடல், ‘இசைக்கொரு குயில் என்று பேரெடுத்தான் / இருமலைத்தான் இன்று சுரம் பிரித்தான்/மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் / மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்’ என்று கலைஞனின் வீழ்ச்சியைச் சொன்ன பாடல் என்று எல்லாம் கவித்துவ உச்சங்கள். ‘மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை’ என்று ஒரே வரியில் ‘முதல் மரியாதை’ கிராமத்துப் பெரிய மனிதரின் வாழ்க்கை வலியைச் சொன்னது வைரமுத்து பாடல்.

இப்படி எளிய பாடல்வரிகள் மூலம் கவித்துவ விளையாட்டு நடத்துவது வைரமுத்துவின் இன்னொரு பலம்.

பாரதிராஜா தமிழ் சினிமாவை ஸ்டூடியோவில் இருந்து கிராமத்துக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் என்றால், வைரமுத்து கிராமத்து வாழ்க்கையைத் தமிழ் சினிமாப் பாடல்களில் பதியவைத்தவர். ‘காத்தடிச்சா தாங்காதடி மல்லிகைப்பூ மாராப்பு / கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு / அட போடி புள்ள எல்லாம் டூப்பு’ என்பதில் கவித்துவத்தில் இழைந்த கிராமத்துக்குசும்பு இருக்கிறது…

…இளையராஜா – வைரமுத்து கூட்டணி இணைந்து இயங்கியது ஆறு ஆண்டுகள்தான். ஆனால் பல ஆண்டுகளாய்ப் பாடல்கள் கேட்ட பிரமை தமிழர்களுக்கு. ‘நிழல்களி’ல் ஆரம்பித்த பயணம் 1986, ‘புன்னகை மன்னனி’ல் கடைசிப் புன்னகை உதிர்த்து விடைபெற்றுக் கொண்டது. ஆனால் இந்த ஆறு ஆண்டுகளில் ‘அந்திமழை பொழிகிறது’, ‘விழியில் விழுந்து’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ஈரமான ரோஜாவே’, ‘மௌனமான நேரம்’, ‘பூங்காற்று திரும்புமா’, ‘பூவே பூச்சூடவா’, ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்று இசையும் மொழியும் இயைந்து கொடுத்த பாடல்கள் அத்தனையும் ஆன்மாக்குள் ஊடுருவுபவை.

இந்தக் கூட்டணி எப்படியாவது மீண்டும் இணையவேண்டும் என்பது இன்றுவரை நிறைவேறாத நிராசையாகவே இருக்கிறது. இளையராஜா – வைரமுத்து இணைய வேண்டும் என்பது தமிழர்களுக்கு எப்போதும் இருக்கும் பேராசை. ஆனால் வைரமுத்துவின் மீள்வருகை நிகழ்ந்தது ‘சின்னச் சின்ன ஆசைகள்’ மூலமாக.

எளிய வரிகள்தான். ஆனால் ‘மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை’, ‘வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை’ என்று தமிழகத்தின் திசையெங்கும் ஆசைகள் பரவின. இப்படி எளிய பாடல்வரிகள் மூலம் கவித்துவ விளையாட்டு நடத்துவது வைரமுத்துவின் இன்னொரு பலம்.

எளிமை என்பது வேறு; சாதாரணம் என்பது வேறு. வைரமுத்துவின் எளிமையான பாடல் வரிகள் சாதாரண வரிகளாக இருக்காது. அதில் கவித்துவப் பூச்சு கட்டாயமிருக்கும். ‘சின்னச் சின்ன ஆசை’, ‘கண்ணுக்கு மையழகு’ போன்ற பாடல்கள் கேட்கும்போது எளிய வரிகளாக இருந்தாலும் கவித்துவ ஆழம் கொண்டவை. கூழாங்கற்கள் எளியவைதான். ஆனால் அவை ஆற்றின் ஆழத்தில் திளைப்பவை.

92-ல் ‘ரோஜா’ வெளியானது. வானத்தில் பொன்மாலைப் பொழுதை இளையராஜா தொடங்கிவைத்தார் என்றால், வனத்தின் ரோஜா நறுமணத்தை ரஹ்மான் தொடர்ந்து வைத்தார். வைரமுத்துவின் மறு உச்சத்தின் போது களமும் காலமும் மாறியிருந்தன…

– ‘வானம் எனக்கொரு போதிமரம் / நாளும் எனக்கது சேதி தரும்’ என்று தன் முதல் பாடலை வைரமுத்து எழுதி 40 ஆண்டுகள் ஆகின்றன. நாற்பது ஆண்டுகளாக வானம் வைரமுத்துவுக்குச் சேதி தந்து கொண்டுதானிருக்கிறது. ‘பொன்மாலைப் பொழுது’க்குப் பிறகு வைரமுத்து வானத்தில் மழைதான். அந்த வானத்தில் இளையநிலாவும் பொழிந்தது; அந்திமழையும் பொழிந்தது

நன்றி: விகடன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button