. ராஜா என்பது எனக்கு இசை மட்டும்தான்

நான் இன்றும், என்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிரமான ரசிகன். அதற்கான தர்க்கங்கள் என்னிடம் போதிய அளவில் இருக்கின்றன.ஆனால் இந்த மனநிலை ராஜாவை மதிப்பதற்கோ , ரசிப்பதற்கோ ஒரு போதும் தடையாக இருந்ததில்லை.
நானறிந்தும் அறியாமலும் இந்த உலகில் வாழ்ந்த , வாழுகிற ஆயிரக்கணக்கான இசை மேதைகளில் இவர்கள் இருவரும் அடக்கம். நம் மொழி , நம் ஆள் என்பதால் நாம் வரம்பு மீறிப் புகழலாம். ஆனால் பிறரை மட்டம் தட்டாத வரை அதில் தவறில்லை.
ராஜா பாடல்கள் குறித்த என் ரசனை வேறு மாதிரியானது. மிக முக்கியமாக நான் அவரை என்னுடைய சொந்த வாழ்வின் ஞாபகங்களோடு இணைத்துக் கொள்வதில்லை. (எவரையும்தான்). இசை என்பதை பாடகர்களின் குரல் , இயக்குநரின் ரசனை , வாத்தியங்களின் மாயாஜாலம் , பாடல் வரிகளின் பொருத்தம்& கவித்துவம் ஆகியவற்றின் கூட்டு வடிவமாகவே பார்க்கிறேன்.எந்தப் பாடலும் தனியொருவரின் கற்பனையோ சொத்தோ அல்ல.
இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம் மினி பஸ்களில் போடப்படுகிற ஒரே தன்மை கொண்ட பாடல்களோ , இரவுகளில் அழ வைக்கும் காதல் சோகப் பாடல்களோ , தாயை நினைத்துப் புல்லரிக்கும் மிகையுணர்ச்சிப் பாடல்களோ என் பட்டியலில் வராது.
பாலு மகேந்திரா, மகேந்திரன் , மணிரத்னம் , பாரதிராஜா, பாலச்சந்தர், பாலா , ஃபாசில் ஆகிய முக்கியமான இயக்குநர்களோடும் , கமலோடும் ராஜா இணைந்து செய்த அனைத்துப் பாடல்களும் மீண்டும் மீண்டும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய பொக்கிஷங்கள்.ஒவ்வொரு பாடலும் ஆயிரம் கதைகள் சொல்லும்.
கர்நாடக இசை , நாட்டுப்புற இசை , மேற்கத்திய செவ்வியல் இசை ஆகிய மூன்றிலும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் ராஜா எண்பதுகளின் இறுதிக்குள் செய்து முடித்து விட்டார். அதனால்தான் ரஹ்மான் அவர் அதிகம் கையாளாத இந்துஸ்தானி , ராக் , ஆப்பிரிக்க ஆசை , மேற்கத்திய துள்ளல் இசை, அரபி இசை , சூஃபி இசை , வட இந்திய நாட்டுப்புற இசை என்று புதிய பாதையை நோக்கி நகர்ந்தார்.
உண்மையில் ஓர் இசை ராட்சசன் சினிமா என்கிற சிறிய எல்லையில் நின்று ஆடிய பேயாட்டமே அவருடைய முதல் 17 ஆண்டுகள்.தமிழ் மரபிசை திரைத்துறையில் அடைந்த உச்சம் அவரால்தான் நிகழ்ந்தது.நவீன தமிழ்த்திரை இசையின் தொடக்கமும் அவர்தான்.
92 க்குப் பிறகும் ராஜா மிக நிதானமாக சதம் அடித்துக் கொண்டேதான் இருந்தார். 2004 விருமாண்டி வரை அவர் எவராலும் அவுட் ஆக்க முடியாத நாட் அவுட் பேட்ஸ்மேன்தான். அவருடைய தொண்ணூறுகளின் இசைக்கு பெரும் ரசிகன் நான். குறிப்பாக கலைஞன் படத்தின் ‘ எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா ?’ ராஜாவின் உச்சங்களில் ஒன்று.
ஆனால் அதிசயமாக 2004 க்குப் பின்பும் அவர் படைப்பாற்றல் மங்கி விடவில்லை. இந்த நிமிடம் வரை உயிர்ப்போடு இருக்கிறார். அவ்வப்போது ஆச்சர்யங்களைத் தந்து விடுகிறார்.
நான் அவரைப் பார்த்து மிரண்டது இரண்டு தருணங்களில்
1. ரஹ்மானும் , பிற இசையமைப்பாளர்களும் வெற்றிகரமாக தம் கொடிகளை வணிக ரீதியாக நாட்டி விட்ட தருணத்தில் ஒரு சுனாமியைப் போல் சீறியெழுந்து அவர் சகலரையும் மிரட்டிய ஹேராம்& விருமாண்டி
2. இந்த எண்பது வயதிலும் அவர் 20 வயது இளைஞனின் உற்சாகத்தோடு இசையமைத்த ‘ மெட்ராஸ் மார்டன் லவ் ஸ்டோரி ‘ பின்னணி இசை மற்றும் பாடல்கள்.
அவரளவிற்கு படைப்பூக்கம் மங்காத மனமும் , பெரிய ஜாம்பவான்களோடு பணி புரிகிற வாய்ப்பும் , மகத்தான காலகட்டமும் இன்னொருவருக்கு அமைவது மிகவும் கஷ்டம். அவர் முழுக்க முழுக்க இசையால் ஆசிர்வதிக்கப்பட்டவர்.
அவரளவிற்கு முகநூலில் புகழப்படுகிற, தமிழ்ச் சமூகத்தால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிற வேறொரு தமிழ் ஆளுமை தற்போது உயிரோடு இல்லை. நான் அவர் மீது எப்போதும் பெரு வியப்பு கொண்டவன்.ரசிகர்கள் எனும் வேடத்தில் இயங்குகிற ‘அவருடைய வெறியர்களின்’ மட்டையடி விமர்சனங்களை தொடர்ந்து இங்கு கண்டு எரிச்சல் அடைவதால்தான் அவர் குறித்து அதிகம் எழுதுவதில்லை.
அவருடைய இசை தாண்டிய சேஷ்டைகளை நான் கண்டு கொள்வதில்லை. அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. ஆகவே எனக்கு அதில் ஆதரிப்பதற்கோ , எதிர்ப்பதற்கோ எதுவும் இல்லை. ராஜா என்பது எனக்கு இசை மட்டும்தான்.
எல்லாவற்றையும் விட நான் வசிக்கும் உத்தமபாளையத்திலிருந்து சில மைல்கள் தொலைவுதான் அவர் பிறந்த பண்ணைப்புரம். அவர் சுவாசித்த காற்றைத் தான் நானும் சுவாசிக்கிறேன் என்பதே பெருமிதம்தான்.
அவர் இதே படைப்பூக்கத்தோடு நூறாண்டுகள் வாழ வேண்டும்; வாழ்வார் .
* மானசீகன்*
