‘பெண் மையத் திரைப்படங்களை’ உருவாக்கிய இயக்குநர்களில் கே.பாலசந்தர் முக்கியமானவர்.

பெண்ணியம் அழுத்தமாகப் பேசப்பட்டு வரும் சமகாலத்தில் கூட தமிழ்த் திரைப்படங்கள் ஹீரோக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஆண் மையத் திரைப்படங்களே இங்கு அதிகம் வெளியாகின்றன; வெற்றியடைகின்றன. கதாநாயகிகள் இன்னமும் கவர்ச்சிப் பதுமைகளாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் எழுபதுகளில் தொடங்கி தொடர்ச்சியாக ‘பெண் மையத் திரைப்படங்களை’ உருவாக்கிய இயக்குநர்களில் கே.பாலசந்தர் முக்கியமானவர். ‘அரங்கேற்றம்’ லலிதா, ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதா, அபூர்வ ராகங்கள் ‘பைரவி’, ‘அவர்கள்’ அனு, ‘அக்னி சாட்சி’ கண்ணம்மா என்று அவர் உருவாக்கிய பல பெண் பாத்திரங்கள் மறக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த வரிசையில் ஒருவராக ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் குறிப்பிடத்தக்கவர்.
இந்தப் படத்தில் ஏறத்தாழ பதினைந்திற்கும் மேற்பட்ட புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருந்தார் இயக்குநர் பாலசந்தர். இதில் குறிப்பிடத்தகுந்தவர்களாக விவேக், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், லலிதகுமாரி போன்றவர்களைச் சொல்லலாம்
படத்தின் வணிகத்தை மட்டும் பிரதான இலக்காகக் கொண்டு, பார்வையாளர்களின் ஜீரண சக்தியையும் ஆரோக்கியத்தையும் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மசாலாவைக் கொட்டி படமெடுக்கும் இயக்குநர்களின் மத்தியில் அதிலிருந்து கணிசமாக விலகி சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து தனது படைப்புகளைத் தொடர்ச்சியாகத் தர முயன்ற பாலசந்தரின் பிடிவாதத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
நன்றி: விகடன்