ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’

‘வாடகைக்குப் பதிலாக வீட்டு
உரிமையாளரை உல்லாசத்துக்கு அழைத்த சென்னை அழகிகள் கைது’ என்கிற ஒரு தினசரியின் செய்தீ என் கண்களைப் பற்றியது.
விபசாரத்தில் கைது செய்யப்படுகிற பெண்களை எல்லாம் குறிப்பிட்ட இந்தப் பத்திரிகையாளர்கள், மறக்காமல் ‘அழகிகள்’ என்றே அடிக்கோடிட்டு எழுதுகிறார்கள். அந்த அழகிகளோடு இருந்த ஆணழகன்களை நான் பார்த்ததும் இல்லை; படிக்கவும் இல்லை.
பாலியல் தொழிலுக்கும் அழகுக்கும் என்ன தொடர்பு என்று அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்துக் கேட்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.
புதுமைப்பித்தனின் ஒரு கதையில், ‘உடல்நிலை சரியில்லாத கணவனுக்குப் பால்கஞ்சி வார்க்க, முக்கால் ரூபாய்க்கு (எழுபத்தைந்து பைசா) இருளில் மறைந்த’ அந்தப் பெண் அழகாக இருந்தாளா என்று தெரியவில்லை. ஆனால், அவளுக்கு முன்னால் ஆண்கள் அனைவரும் அசிங்கமாக இருந்தார்கள். ஒருவேளை இந்தப் பத்திரிகையாளர் புதுமைப்பித்தனின் இலக்கிய வாரிசா என்றும் தெரியவில்லை.
இந்த விஷயத்தில் சாருநிவேதிதாவை எனக்கு நிறையப் பிடிக்கும். எந்த ஒரு பெண்ணைப் பற்றி எழுதும்போதும் ‘அழகி’ என்பார். இன்னும் கொஞ்சம் கூடுதலாக சொல்லத் தோன்றும்போது ‘பேரழகி’ என்பார்!
பாலியல் தொழில்தான் இந்த உலகத்தின் மிகப்பழைய தொழிலாக இருந்து வருகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ்ப் பண்பாடு. ஆனால், அந்தப் பண்பாடு ‘பலபாடு’ பட்டிருக்கிறது. அதனால்தான் தொல்காப்பியத்திலேயே பரத்தையர் பிரிவு இருக்கிறது.
‘நானும் தலைவனும் நீர்த் துறையில் நீந்தி விளையாடுவதைக் கண்டு தலைவி அச்சமடைந்தால், எழினி மன்னன் போரில் பகைவரோடு நேர்மையுடன் மோதி பசுக்களின் கூட்டத்தை மீட்டது போல, முடிந்தால் என்னிடமிருந்து தலைவி தலைவனின் மார்பைக் கவர்ந்து காக்கட்டும்’ என்று ஒரு பரத்தை குறுந்தொகையில் ஔவையாரின் வழியாக குரல் கொடுக்கிறார்; சவால் என்று கூட சொல்லலாம்.
நமது தொலைக்காட்சித் தொடர்களின் வசன மொழியில் சொல்வதென்றால், ‘ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல், காலமெல்லாம் 24 காரட் தங்கமாக & குமிழிகள் அற்ற கனத்த வைரமாக அப்படியே ஜொலிக்க முடியுமா?
ஒரு பெண்ணை ஓர் ஆண் உண்மையாகக் காதலிக்க முடியுமா என்கிற கேள்வியை லேசாக கேட்டுவிடலாம். பொய்யில்லாத பதிலைக் கேட்க வேண்டுமானால் கண்ணதாசனையும் ஓஷோவையும்தான் அணுக வேண்டும்.
‘வாழ்க்கையில் ஒருமுறைதான் காதல் வருகிறது என்கிறார்கள். நான் நினைக்கிறேன் & ஒவ்வொரு பெண்ணிடமுமே ஒருமுறை காதல் வருகிறது’ என்கிறார் கண்ணதாசன்.
‘ஒரு பெண்ணை நீ உண்மையாக விரும்பினால், அவள் எதையெல்லாம் அடைய விரும்புகிறாளோ, அதையெல்லாம் அவள் அடைவதற்கு நீ உதவ வேண்டும். உனக்கு எப்படி பக்கத்து வீட்டுப் பெண் மீது ஒரு மோகம் வருகிறதோ அதைப் போல அவளுக்கும் பக்கத்துவீட்டு இளைஞன் மீது ஒரு மோகம் வந்தால், அவள் அவனை அடைவதற்கு நீ உதவ வேண்டும். அப்படியென்றால்தான் அவளை நீ முழுமையாகக் காதலிக்கிறாய் என்று அர்த்தம்’
- பழநிபாரதி
நன்றி: குங்குமம்