சினிமா

இசைக்குயில் எஸ்.ஜானகி 84ஆவது பர்த் டே

!🔥

🎬இசைக்குயில் எஸ்.ஜானகி 84ஆவது பர்த் டே டுடே!💐

தமிழ் கூறும் நல்லுலகம் எந்தக் கலைஞரையும் அவர் வாழ்கின்ற காலத்தில் கொண்டாடியதில்லை. அதற்கு எஸ்.ஜானகியும் விதிவிலக்கில்லை. ஆனாலும் எஸ்.ஜானகியைக் கொண்டாட நமக்கு இன்னமும் வாய்ப்பிருக்கிறது. 1957 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.ஜானகி தமிழ் மொழியில் பாடி வருகிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒரியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கனி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் 20,000 கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.அவர் இசைத்துறைக்கு வந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது என்ற பீடிகையுடன் கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி:.

ஆந்திர டிஸ்டிரிகில் இருக்கும் பள்ளப்பட்டி வில்லேஜில் பிறந்தவர் ஜானகி. அப்பா ஸ்கூல் டீச்சர். அதனால்தானோ என்னவோ ஜானகிக்குக் எஜூகேசனில் ரொம்ப இண்டரஸ்ட் இல்லை. அப்பாவிடம் அடியும் திட்டும் வாங்கியபோதும் தனக்குப் பிடிக்காத கல்வியிடம் இருந்து விலகியே இருந்தார். தக்கனூண்டு வயசிலிருந்தே ஒரு முடிவு எடுத்தால், அதில் விடாப்பிடியாக இருப்பது ஜானிகியின் குணம். ‘இனி என்னதான் செய்றது? படிக்க மாட்டேன்னு சொல்றாள். இனி அவளோட தலையெழுத்தை அவளே முடிவு செய்யட்டும்’ என அவரது அப்பா சொல்லி புட்டார். படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தாலும், இசைஞானம் ஜானகியைப் புகழின் உச்சிக்கு கொண்டுசென்றது. மூன்று வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களையும் பாடி அசத்தினார்.

இவரது திறமையைய்டும், ஆர்வத்தைப் பார்த்து, எட்டாவது வயசில் பைடிசாமி என்கிற நாதஸ்வர வித்வானிடம் இசை கற்க அனுப்பினார் தந்தை. ஆர்வமுடன் இசை கற்றுவந்த ஜானகியிடம், ‘நீ சங்கீதம் கத்துகிட்டது போதும். நீயே சங்கீதம்தான். இனி உனக்குச் சங்கீதம் கத்துக்கொடுக்கத் தேவையில்லை’ என பத்தே மாதங்களில் குருநாதர் வாழ்த்தி அனுப்பிப்புட்டாருன்னா பார்த்துகளேன்.

அதையே பலமா பிடிச்சிண்டு மெட்ராஸூக்கு ஷிப்ட் ஆன நிலையில், ஏவிஎம் ஸ்டுடியோவில் வேலை கிடைச்சு, படிப்படியாகச் சினிமா பாடல் பாடும் வாய்ப்பு கிடைச்சுது. 1957-ம் வருசம், ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து அவரது குரலில் ஏராளமான வெற்றிப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. குறிப்பாக, 1962-ம் ஆண்டு ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் இவர் பாடிய ‘சிங்கார வேலனே தேவா’ பாடலை இன்னிக்கும் மத்த சிங்கர்ஸ் பாட பயப்படுவாஹ. அவ்வளவு கஷ்டமான பாடலை இளம் வயதிலேயே இஷ்டப்பட்டு பாடி அசத்தியவர் இந்த ஜானகி.

அதே ஏ வி எம்-மில் இருக்கும் போதே தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார். கன்னடம், மலையாள மொழிகளை நன்றாகப் பேசுவார். இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடல்களை ஓய்வின்றி பாடினார். தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தபோதும், 70-களின் இறுதியில்தான் எஸ்.ஜானகிக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. பல வெரைட்டியான பாடல்களையும் பாடும் திறமை இருந்தும், அதற்கான முழுமையான வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது நேரம் உருவானது

புதுக்கூட்டணி. 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம், ஜானகிக்குத் தமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத புகழைக் கொடுத்தது. அந்தப் படத்தில் இவர் பாடிய எல்லாப் பாடல்களும் செம ஹிட். குறிப்பா மச்சானப் பார்த்தீங்களா-வும் அன்னகிளியே உன்ன தேடுதே-வும் இன்னிக்கும் மாஸ்டர் பீஸ். இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து ஜானகியின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார்.

அதனால், எழுபதுகளின் பிற்பகுதியில் தொடங்கி, தொண்ணூறுகள் வரை, இளையராஜா இசையமைப்பில் எஸ்.ஜானகி பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இளையராஜா இசைடமைப்பில் எஸ்.ஜானகி – எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய டூயட் பாடல்கள் இன்றளவும் காதல் மனங்களை வருடும் கீதங்கள். தொடர்ந்து 90-களில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தற்போதைய அனிருத் வரையில் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

சோலோ, டூயட், தாலாட்டு, குத்து, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் பாடி, இன்றளவும் சாதனையில் முன்னிலையில் இருக்கும் தென்னிந்திய பின்னணிப் பாடகி இவரே. கஷ்டமான பாடலாக இருந்தாலும், கண்களை மூடாமல், கைகளை அசைக்காமல், முகபாவனைகளில் கஷ்டப்படாமல் மிக எளிதாகப் பாடுவது இவருக்கே உரிய சிறப்பு. குழந்தைக் குரலில், ஆண் குரலில் பாடி எல்லோரையும் ஆச்சர்யப்படவைப்பார். அதிகமான இந்தி மொழிப் பாடல்களைப் பாடிய ஒரே தென்னிந்திய பாடகியும் இவரே. நான்கு தேசிய விருதுகள், பல்வேறு மாநிலங்களின் முப்பதுக்கும் அதிகமான விருதுகளை வென்றவர் ஜானகி. புகழ் உச்சியில் இருந்தபோது மத்திய அரசின் பத்ம விருதுகள் கிடைக்கவில்லை. எனவே, 2013-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த ‘பத்ம பூஷண்’ விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தென்னிந்திய கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை தைரியமாகச் சொன்னார்.

பின்னாளில் 1992-ம் ஆண்டு, தேவர் மகன் படத்தில் பாடிய ‘இஞ்சி இடுப்பழகா’ பாடலுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருதைப் பெற டெல்லி சென்றிருந்த சமயம். ஜானகியைப் பேட்டி எடுத்த செய்தியாளர்களிடம், ‘இதே ஆண்டில் ‘ரோஜா’ படத்தில் ‘சின்னச் சின்ன ஆசை பாடலை பாடகி மின்மினி மிகத் திறமையாகப் பாடியிருந்தார். எனக்குக் கிடைத்த தேசிய விருது அந்தப் பொண்ணுக்கு கிடைத்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என கூறி நெகிழவைத்தவர்.

எந்த அலங்காரமும் செய்துகொள்ளாத, நகைகள் அணியும் பழக்கம் இல்லாத எளிமையான தோற்றம். எப்போதும் வெள்ளை நிறச் சேலையுடன், கழுத்துவரை நீண்ட ரவிக்கையுடன் இருப்பது ஜானகியின் அடையாளம். ‘ஒருவேளை எனக்குப் படிப்பில் ஆர்வம் வந்து படிக்கச் சென்றிருந்தால், வேறொரு துறைக்குப் போயிருப்பேன். என் குரல் வீட்டைத் தாண்டிருக்காது. இப்போ இத்தனை பேர் என் பாடல்களை ரசிச்சுக்கிட்டு இருக்க மாட்டாங்க. கடவுள் எனக்குக் கொடுத்த அன்புப் பரிசு இசைஞானம்.

இப்பேர்பட்ட எஸ்.ஜானகி, இன்னும் பல்லாண்டுகள் நீடித்த ஆயுளுடனும் புகழுடனும் வாழ வாழ்த்துவோம்!

From The Desk of கட்டிங் கண்ணையா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button