ஜேம்ஸ் பாண்டாக நடித்துப் புகழ்பெற்ற பிரிட்டன் நடிகர் ரோஜர் மூர் காலமான தினமின்று

ஜேம்ஸ் பாண்டாக நடித்துப் புகழ்பெற்ற பிரிட்டன் நடிகர் ரோஜர் மூர் காலமான தினமின்று!
சுமார் 12 ஆண்டுகள் இவர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் கலக்கினார். இவரது ஸ்பை ஹூ லவ்ட் மீ, மூன் ரேக்கர் போன்ற படங்கள் உலகப்புகழ் பெற்றவை என்பதோடு, இந்திய ரசிகர்களையும் கவர்ந்திழுத்த படங்களாகும்.
லண்டனில் பிறந்தவர். அப்பா போல போலீஸாக வேண்டும் என்பது லட்சியம். ஆனால், ஓவியராகி, பின்னர் திரைப்பட அனிமேஷன் துறைக்கு வந்தார். அதிலும் நிலைக்கவில்லை. பிறகு, புகைப்படக் கலைஞரான நண்பரின் உதவியால் மாடலிங் செய்தார். ஆனாலும், பெரிதாக சாதிக்கமுடியவில்லை. ஜட்டி, பனியன், பற்பசை விளம்பரத்துக்குதான் கூப்பிட்டார்கள். மாடலிங் செய்தபோது ஹாலிவுட்டில் நடிக்க ஆசை துளிர்த்தது. ராயல் அகாடமி ஆஃப் டிரமாடிக் ஆர்ட் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். முதலில் தெரு நாடகங்கள், டிவி தொடர்களில் வாய்ப்பு வந்தது.
1945-ல் ஹாலிவுட்டில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. 5 ஆண்டுகள் உழைத்தும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் வெறுத்துப்போனவர் மீண்டும் டிவி சீரியலுக்கு சென்றார். ‘டிராயிங் ரூம் டிடெக்டிவ்’, ‘தி செயின்ட்’ ஆகிய டிவி தொடர்கள் இவரை உளவாளியாக பிரபலமாக்கின.
ஒருவழியாக 46 வயதில் கதாநாயகன் ஆனார். 1973-ல் வெளிவந்த ‘லிவ் அண்ட் லெட் டை’ திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்ட் அவதரித்தார். ஆம்
ஷான் கானரிக்குப் பிறகு 1972-ல் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை ரோஜர் மூர் ஏற்றார். ஜேம்ஸ் பாண்ட் 007-ஆக லிவ் அண்ட் லெட் டை மூலம் அறிமுகமானார். நீண்ட காலம் ஜேம்ஸ் பாண்டாக நடித்த பெருமை ரோஜர் மூருக்கு உண்டு. தி மேன் வித் த கோல்டன் கன், தி ஸ்பை ஹூ லவ்ட் மீ, மூன் ரேக்கர், ஃபார் யுவர் அய்ஸ் ஒன்லி, ஆக்டோபஸ்ஸி, எ வியூ டு கில் ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார். 1991-ம் ஆண்டு யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.
ஜேம்ஸ் பாண்டாக நடித்து வந்த காலத்தில் வேறு 13 படங்களிலும் அவர் நடித்திருந்தார். நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் ரோஜர் மூர் நடித்துள்ளார்.
ஒரிரு சுவையான விஷயம் தெரியுமா? படப்பிடிப்பில் துப்பாக்கியும் கையுமாக திரிபவருக்கு உண்மையில் துப்பாக்கி, வெடிபொருட்களைக் கண்டால் பயம். ஆமாம், அவருக்கு ஹோலோஃபோபியா நோய் இருந்துச்சு. அத்துடன் தான் நடித்தது உட்பட எந்த ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தையும் முழுமையாக பார்த்ததில்லையாக்கும்!