விட்டலாச்சாரியா நினைவு நாளின்று

விட்டலாச்சாரியா நினைவு நாளின்று
சில திரைப்படங்கள், பார்க்கும் பார்வையாளர்கள் எந்த வயதையொத்தவர்களாக இருந்தாலும், அவர்களை குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைக்குமளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, அக்காலத்தில் வெளிவந்த விட்டலாச்சார்யா திரைப்படங்களை சொல்லலாம். ‘மாய மோதிரம்’, ‘ஜெகன் மோகினி’ போன்ற திரைப்படங்கள் அக்காலத்தைய ஹாரி பாட்டர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், ஆனால் அவைகள் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்படவில்லை..! பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தையாய் மாறி ரசிக்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் அவை.
அதாவது நம்ம சின்ன வயதில் நம் பாட்டி சொல்லும் மந்திரக் கதைகளில் இடம்பெறும் வரிகள்,
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி அங்க ஒரு குகை இருக்கும். அந்த குகையில ஒரு கூண்டு, அந்த கூண்டுக்குள்ள ஓரு கிளி இருக்கும். அதுல தான் அந்த மந்திரவாதியோட உயிர் இருக்கு. கற்பனைக் கதைகளும் மந்திர தந்திரக் கதைகளும் கேட்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அலாதியானது. இதுபோன்ற கதைகளுக்கு திரையில் உயிர் கொடுத்தவர்தான் மாயாஜால மன்னன் இயக்குநர் விட்டலாச்சாரியா.
தெலுங்குத் திரையுலகில் அதிகமான படங்களை இயக்கிய விட்டலாச்சாரியா, பெரும்பாலான படங்களை அவரது ‘விட்டல் புரொடக்ஷன்ஸ்’ மூலமாக தயாரித்தார். ஜகன் மோகினி, மாயா மோகினி போன்ற மோகினிகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை இவரையே சேரும். பயங்கர உயரமான சிலை சிரிப்பது, பாய் பறப்பது, வித்தியாசமான மந்திரச் சொற்கள் என விட்டலாச்சாரியா படங்கள் விநோதமான அனுபவத்தை தரும். ஜகன் மோகினியையும் ஜெயமாலினியையும் மறக்கமுடியாத ஐயாக்கள் இங்கே ஆயிரம் ஆயிரம் பேர் உண்டு.
இவரது படங்களில் வரும் துஷ்ட தேவதைகள் கேட்கும் காணிக்கைகள் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். மாய மோகினி படத்தில் வரம் கேட்கும் மந்திரவாதியிடம் துஷ்ட தேவதை என்ன கேட்கும் தெரியுமா?… உலகத்திலேயே தாயை மிகவும் மதிக்கும் ஒருவனைத் தேடி அவன் கையாலேயே அவன் தாயை கொலை செய்ய வைக்கவேண்டும். இதுபோன்ற வசனங்களை கேட்கும்போதே நமக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.
இன்று ஹாரிபாட்டர் படங்களில் வரும் பறக்கும் துடைப்பத்துக்கு விட்டலாச்சாரியா தன் படங்களில் பயன்படுத்திய பறக்கும் நுட்பங்கள் முன்னோடியாக இருந்திருக்கலாம். JK Rowling விட்டலாச்சாரியாவின் விந்தைகளை பார்த்திருக்க வாய்ப்பிருக்கலாம். ஜகன் மோகினி படத்தில் வரும் அடுப்பில் கால் வைத்து எரிக்கும் காட்சி இன்றளவும் மீம்ஸ்களாக வலம் வருகிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான NTR-ஐ வைத்து ஐந்து படங்களுக்கும் மேல் இயக்கியிருக்கிறார். NTR-இன் பிரியமான இயக்குநர்களில் விட்டலாச்சாரியாவுக்கு என்று தனி இடம் உண்டு. சிறுவயது முதலே நாடகங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவர் விட்டலாச்சாரியா.
இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்று சிறை சென்றிருக்கிறார். ‘மகாத்மா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் 1944 முதல் 1953 ஆம் ஆண்டு வரை பல்வேறு கன்னடப் படங்களை தன் நண்பர்களுடன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அதன்பிறகு 1953ஆம் ஆண்டு அது விட்டல் புரொடக்ஷனாக மாறியது. பல்வேறு ஆண்டுகளாக திரைத்துரை சார்ந்து இயங்கிய மாயாஜால மன்னன் இதே (மே 29- 1999) இல் காலமானார் அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது மாயாஜாலங்கள் நம் மனதை விட்டு மறையாது
From The desk of கட்டிங் கண்ணையா!