றெக்கையே இல்லாமல் மகிழ்ச்சியில் நாமும் பறப்போம்.

ரிக்க்ஷாக்காரன் 52 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். எனக்கு அந்த கோர்ட் சீன் மிகவும் பிடிக்கும். மஞ்சுளாவைக் காப்பாற்றும் முயற்சியில் அசோகனின் ஆட்களை தாக்கியதாக நீதிமன்றத்தில் மக்கள் திலகத்தை ஆஜர்படுத்துவார்கள். வக்கீல் கேட்கும் குறுக்கு கேள்விகளுக்கு தனது செயலை நியாயப்படுத்தி நிதானமாகவும் நகைச்சுவையாகவும் பதில் சொல்வார்.
கடைசியாக, வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்ற நீதிபதியின் கேள்விக்கு, ‘நடந்ததை நான் சொல்லிட்டேன், நடக்காததை வக்கீலய்யா சொல்லிட்டாரு, நடக்க வேண்டியதை நீங்கதான் சொல்லணும்’ என்று படு கேஷூவலாகச் சொல்வார். அதைச் சொல்லிவிட்டு, ‘மனசாட்சிப்படி செயல்பட்டு செய்ய வேண்டிய கடமையைச் செய்தோம். இனி நீதிமன்றம் என்ன முடிவு வேண்டுமானாலும் சொல்லட்டும்’ என்பதுபோல், தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல், நீதிபதி என்ன சொல்லப் போகிறார் என்று கவனிக்காமல், தான் அணியும் தொப்பியில் பிரிந்து கிடக்கும் நூல்களை ஒவ்வொன்றாக எடுப்பார். அருமையான காட்சி.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் காரணமான சைக்கிள் ரிக்க்ஷாவில் அமர்ந்தபடியே மக்கள் திலகம் சிலம்பம் சுழற்றும் சண்டைக் காட்சி. மக்கள் திலகத்தின் படங்களில் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் விதவிதமாக இருக்கும். இதில் அதுவரை இல்லாத வகையில் சைக்கிள் ரிக்க்ஷாவை ஓட்டியபடியே சிலம்பம் சுழற்றுவார். ஹேண்ட்பாரில் கம்பு படக்கூடாது. எதிரிகளின் அடிகளை தடுத்து திருப்பி அடிக்க வேண்டும். இதையெல்லாம் ரிக்க்ஷாவை ஓட்டிக் கொண்டே செய்ய வேண்டும். ரிக்க்ஷா ஓட்டலாம். அல்லது சிலம்பம் சுழற்றலாம். ரிக்க்ஷா ஓட்டியபடி சிலம்பம் சுழற்றுவது, ஒரே நேரத்தில் வெவ்வேறு செயல்களை செய்வது கடினம். அதுவும் கம்பை சுழற்றிக் கொண்டே ரிக்க்ஷாவை ரிவர்ஸில் ஓட்டுவார். கால்களை எதிர்புறமாக பெடல் செய்வார். அது இன்னும் கஷ்டம். சிலம்ப சண்டை என்றால் கேட்கணுமா? வாத்தியார் கோலோச்சியிருப்பார்.
சண்டை போடுபவர்கள் கம்பை இழந்தபின் தானும் தன் கையில் இருக்கும் கம்பை வீசி எறிந்துவிட்டு ரிக்க்ஷாவில் அமர்ந்தபடியே பறந்து வருவது போல வருவார் பாருங்கள். றெக்கையே இல்லாமல் மகிழ்ச்சியில் நாமும் பறப்போம்.
@Swaminathan Sridhar