இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது.
‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது.
அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன்.
அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’
அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.
அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.
உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார்.
‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர். பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,
அறிந்ததனை அறிந்தோர்க்கு
அறிவிக்கும் போதினிலே
அறிந்ததுதான் என்றாலும்
எத்துணை அழகம்மா? என்று
அறிந்தோரையும் வியக்க வைக்கும்
அருங்கலையே கவிதையாகும்’
… என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.
தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே…’ என்றார் அண்ணா.
மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!
ஸ்ரீதர் சுவாமிநாதன்…

வள்ளியம்மை வள்ளி