சினிமா

விடுதலை : ஒரு பிளாஸ்டிக் அனுபவம்

விடுதலை : ஒரு பிளாஸ்டிக் அனுபவம்

வெற்றிமாறனின் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவை பக்கா கமர்ஷியல் சினிமாதான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது தென்படும் கலை நுணுக்கங்கள் ரசிக்கக் கூடியவையாக இருக்கும்.

பொதுவாக தமிழில் பொழுதுபோக்குப் படங்கள் என்பவை அருவருப்பாகவும் ஆபாசமாகவுமே இருக்கின்றன. விஜய், அஜித், ரஜினி ஆகியவர்களின் படங்களை உதாரணம் சொல்லலாம்.

ஆனால் வெற்றிமாறன், மணி ரத்னம், மிஷ்கின், கமல்ஹாசன் போன்றவர்களின் படங்கள் பொழுதுபோக்கு சினிமாவே என்றாலும் தரமானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் தமிழில் இவர்களின் படங்களை பொழுதுபோக்கு சினிமாவாகப் பார்க்காமல் கலையாகக் காணும் ஆபத்தும் இருக்கிறது

. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

வெற்றிமாறனின் ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் பொழுதுபோக்கு அம்சத்தை விட கலையம்சம் அதிகம். அதன் காரணமாகவும், படத்துக்கு வந்த அதீதமான வரவேற்பினாலும் மிகுந்த எதிர்பார்ப்புடனேயே விடுதலையைக் காணச் சென்றேன்.

அதிலும் ரயில் விபத்து என்ற ஆரம்பக் காட்சியை பலருமே உலகத் தரம் என்று எழுதியிருந்தார்கள். அதனால் படத்தை ஒரு நிமிடம் கூட விடக் கூடாது என்று அரங்கத்தின் உள்ளே முதல் ஆளாகவே போய் விட்டேன்.

அமெச்சூரிஷ் என்ற வார்த்தை உங்களுக்குத் தெரியும். அதுதான் அந்த ரயில் விபத்துக் காட்சி. ஒரு அட்லி, ஒரு சுந்தர் சி படத்தில் கூட இதை விட நன்றாகக் காண்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரு ரயில் விபத்தை எத்தனை மட்டமாக, எத்தனை அமெச்சூரிஷாகக் காட்சிப்படுத்த முடியுமோ அத்தனை மட்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன்

. சில புதிய இயக்குனர்களின் முதல் படம் ஏதோ விபரீத ராஜ யோக ஜாதகத்தின் காரணமாக பிய்த்துக் கொண்டு ஓடி விடும். உடனே அஜித்தோ விஜய்யோ அவரோடு ஒரு படம் பண்ணுவார்கள். இயக்குனரிடம் கதையே இருக்காது. ஆனாலும் பெரிய தலைகள் தேதி கொடுத்து விட்டதால் படப்பிடிப்புத் தளத்துக்குப் போன பிறகுதான் காட்சி, வஜனம் எல்லாவற்றையும் தயார் பண்ணுவார்கள். கடைசியில் அந்தப் படம் நம் தலையில் வளர்கிறதே அந்த மாதிரி இருக்கும். ஐயோ, இவரா அந்த முதல் படத்தை அப்படி எடுத்தார் என்று ஆச்சரியப்படுவார்கள். அம்மாதிரிதான் இருக்கிறது ரயில் விபத்துக் காட்சி.

விஸ்வரூபம் மாதிரியெல்லாம் படம் வந்த பிறகும் இப்படி ஒரு அபத்தமான, அரைவேக்காட்டுத்தனமான ரயில் விபத்துக் காட்சி வருகிறது என்றால், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் நடக்கும் டிராமாவைப் போலவே இருந்தது அந்தக் காட்சி. இதில் என்ன கொடுமை என்றால், இயக்குனருக்கே அந்தக் காட்சி உலகத் தரம் என்று தோன்றியிருக்கிறது போல, அதனால் எத்தனை நீட்ட முடியுமோ அத்தனை நேரம் நீட்டியிருக்கிறார். படு கேவலம்.

விடுதலை பட்த்தை விட அந்தப் படத்துக்கு வந்த பாராட்டுகள்தான் எனக்கு வேடிக்கையாக இருந்தன. அந்தப் பாராட்டுகளை நம்பித்தான் நானும் படம் பார்க்கப் போனேன். முதலில் சூரியின் நடிப்பு. அவரது நடிப்பைப் பாராட்டாதவர்களே இல்லை. ஆனால் படத்தின் ஆக மொக்கையான விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பது சூரியின் நடிப்பு. இப்படியா ஒருத்தர் பிளாஸ்டிக்கைப் போல் நின்று கொண்டிருப்பார், பேசுவார்? ஆனால் படத்தில் போராளிகளைப் பிடிக்கும் போது நன்கு போல் வால்ட், ஹை ஜம்ப், குட்டிக் கரணம் எல்லாம் செய்கிறார். அப்படியானால் நாம் ”சூரி நன்றாகக் குட்டிக் கரணம் அடித்திருக்கிறார்” என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர நன்றாக நடித்திருக்கிறார் என்றா சொல்வது? புரியவில்லை. சூரி மிக நன்றாகக் குட்டிக் கரணம் அடிக்கிறார். உதாரணம் சொன்னால் திட்டுவார்கள். வேண்டாம்.

அடுத்த பூச்சொரிதல், போலீஸ் அதிகாரியாக வரும் சேத்தன். அவருடைய நடிப்பும் அபாரமாம். கடவுளே! பார்க்கவும் எம்.ஜி. சுரேஷ் மாதிரி இருக்கிறார். நடிப்புக்கும் எம்.ஜி. சுரேஷின் எழுத்தைத்தான் உதாரணம் சொல்ல வேண்டும். படு மட்டமான நடிப்பு.

கௌதம் மேனனின் நடிப்பும் சிலாகிக்கப்படுகிறது. ஆனால் பள்ளிக்கூடங்களில் திருக்குறள் போட்டியில் குழந்தைகள் திருக்குறள் ஒப்பிக்கும் அல்லவா, அப்படி இருந்தது கௌதம் மேனனின் வஜன டெலிவரி. எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்களே கௌதமை விட நன்றாக நடிப்பார்கள் என்று தோன்றுகிறது. (இப்படிச் சொன்னதற்காக “இறங்கி வந்து செய்வேன்” என்று அவர் சொல்லாமல் இருக்க வேண்டும்!)

இப்படி எழுதிக் கொண்டே போகலாம். அலுப்பாக இருக்கிறது. படத்தில் ராஜாவின் பின்னணி இசை தவிர வேறு எதுவுமே நன்றாக இல்லை. அதிலும் ராஜா பாட்டுப் பாடுகிறேன் பேர்வழி என்று சொல்லி நம் முதுகில் பிரண்டையை வைத்துத் தேய்க்கிறார். கொடூரம்.

அடுத்து, படத்தில் அதிகம் பேசப்பட்ட காட்சி, பெண்களை நிர்வாணப்படுத்தி அடிப்பது. உலகில் அதிக பட்ச கொடூரம், பெண்களை நிர்வாணப்படுத்தி அடிப்பதுதான். ஆனால் படத்தில் அந்தக் காட்சி சப்பையாக, பிளாஸ்டிக்காக, எந்த உணர்வலைகளையும் எழுப்பாத வண்ணம் டப்பாவாக வந்திருக்கிறது. காரணம், படம் மொத்தமுமே பிளாஸ்டிக்கை மெல்வது போல்தான் இருக்கிறது என்பதால் நம் அடிவயிற்றைக் கலக்கியிருக்க வேண்டிய அந்தக் காட்சியும் பிளாஸ்டிக்காகவே வந்து போகிறது.

படம் பார்த்து விட்டு வந்த அன்று இரவு சூரியின் பாத்திரத்தில் சிவ கார்த்திகேயனும், விஜய் சேதுபதியின் பாத்திரத்தில் டி. ராஜேந்தரும் நடித்திருப்பதைப் போல் கனவு வந்தது. சூரி மற்றும் விஜய் சேதுபதியை விட அந்த இருவரும் நன்றாகவே நடித்திருப்பதாகத் தோன்றியது.

சரத்குமார் நடித்த நாடோடி மன்னன் படம் பார்த்திருக்கிறீர்களா? அவ்வளவு த்ராபையான ஒரு படத்தை வெற்றிமாறன் எடுப்பார் என்று நான் கனவிலும் கண்டதில்லை. ஆதிவாசிப் பெண்ணாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருந்தார்; ஆனாலும் இத்தனை மட்டமான படத்தில் அதெல்லாம் ஒன்றும் எடுபடவில்லை.

இனிமேல் வெற்றிமாறன் படங்களுக்கு அத்தனை ஆர்வமாகப் போக மாட்டேன் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு: நல்லவேளை, நான் சினிமாவுக்கு வஜனம் எழுதும் பணியில் ஈடுபடவில்லை. ஈடுபட்டிருந்தால் இப்படி என் மனதில் பட்டதை வெளிப்படையாக எழுதியிருக்க முடியாது. கடவுளுக்கும், லௌகீக வாழ்வில் நான் கோபி கிருஷ்ணனைப் போல் ஆகி விடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் நன்றி.

சாருநிவேதிதா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button