தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று..

தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. நடிகவேள் எம்.ஆர்.ராதா பிறந்தநாள் இன்று..! கதாநாயகன்,வில்லன்,குணச்சித்திர நடிகர் என எம்.ஆர்.ராதா ஏற்காத பாத்திரங்களே கிடையாது
தமிழ் சினிமா வரலாற்றில் எம்ஜீஆர், சிவாஜி கணேசன் என ஜாம்பாவன்களின் வரலாற்றை எழுத முற்பட்டால் அதில் நிச்சயம் எம்.ஆர்.ராதா என்கிற பெயரை தவிர்க்க இயலாது. எம்.ஆர்.ராதாவும் சரி அவரது குடும்பமும் சரி இன்று வரை தமிழ் திரையுலகிற்கு செய்தவை,செய்பவை ஏராளம்.பிறவிக் கலைஞனான எம்.ஆர்.ராதாவின் பிறந்த நாளான இன்று (14 April )அவரைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை காண்போம்,
எம்ஆர் ராதா என்றால் சட்டென நினைவுக்கு வரும் படம் “ரத்தக்கண்ணீர்”.முதலில் மேடை நாடகமாக அரங்கேறிய “ரத்தக்கண்ணீர்” பின்பு வர்த்தக சினிமாவாக மாறியது.1954 ம் ஆண்டு வெளியாகிய “ரத்தக்கண்ணீர்” எம்.ஆர்.ராதாவின் திரைவாழ்வில் ஓர் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.இயல்பாகவே திராவிடச் சிந்தனைகளில் ஊறியவர் ராதா.ஐம்பதுகள் என்பது எதையும் துடுக்குத் தனமாக கேள்விகள் கேட்ட காலம்.
ஈர்க்கப்பட்ட எம்.ஆர்.ராதா மூட நம்பிக்கைகளுக்கு எதிரான தன்னுடைய கருத்துக்கள் அனைத்தையும் வசனங்கள் மூலம் முன்வைத்தார்.முதல்பாதி முழுவதிலும் மோகன் என்கிற அழகான இளைஞன் கதாப்பாத்திரத்தில் வலம் வந்த எம்.ஆர்.ராதா இரண்டாம் பாதி முழுவதும் குஷ்டரோகியான அட்டகாசமானதொரு நடிப்பை வெளிப்படுத்தினார்.
கதாநாயகன்,வில்லன்,குணச்சித்திர நடிகர் என எம்.ஆர்.ராதா ஏற்காத பாத்திரங்களே கிடையாது என சொல்லும் அளவிற்கு ஏற்ற அத்தனை பாத்திரங்களிலும் தன்னுடைய தனி முத்திரையை பதித்தார் நடிகவேள். கண்ணதாசன் எழுதி தயாரித்த “கவலை இல்லாத மனிதன்”,பீம்சிங் இயக்கிய பாவ மன்னிப்பு ,பாலும் பழமும்,படித்தால் மட்டும் போதுமா போன்ற படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரங்களை சிறப்பாகவே ஏற்று நடித்தார் எம்.ஆர்.ராதா.
பி.ஆர்.பந்தலு இயக்கி தயாரித்த “பலே பாண்டியா” படத்தில் கபாலி மற்றும் அமிர்தலிங்கம் பிள்ளை என இரு வேடங்களில் சிரிப்புச் சரவெடியை கொழுத்தியிருப்பார்.பின்னாட்களில் “உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் மணிவண்ணன் ஏற்றிருந்த இரட்டை வேடங்களுக்கு பலே பாண்டியாவின் கபாலி மற்றும் அமிர்தலிங்கம் கதாப்பாத்திரங்கள் முன்னோடி எனலாம்.
எம்.ஜீ.ஆருடன் தாயைக் காத்த தனயன்,பாசம்,பெற்றால் தான் பிள்ளையா போன்ற படங்களில் நடித்த எம்.ஆர்.ராதா ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரை எம்.ஜீ.ஆருடன் நட்புறவிலேயே தான் இருந்தார். ஆரம்ப நாட்களில் நாத்திக வாதியாக தன்னை காட்டிக் கொண்ட எம்.ஆர்.ராதா எழுபதுகளின் இறுதிகளில்,அதாவது தன்னுடைய இறுதி நாட்களில் பக்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.வேலும் மயிலும் துணை படத்தில் முருக பக்தராகவும்,சரணம் ஐயப்பா படத்தில் ஐயப்ப பக்தராகவும் நடித்திருந்தார்.
தன்னுடைய எழுபத்தி இரண்டாவது வயதில் இறந்து போன எம்.ஆர்.ராதாவின் வாரிசுகள் ராதாரவி,ராதிகா,நிரோஷா என அடுத்தடுத்து தங்களது கலைப் பயணத்தை தொடர்ந்து கொண்டு தான் உள்ளனர். உடல்மொழி,வசன உச்சரிப்புகளில் ஏற்ற இறக்கம் என தன்னுடைய இறுதி நாட்கள் வரை தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்த நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவின் பெருமைமிகு பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது.