‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா

!
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார்.
தஞ்சாவூர்ப் பக்கம்தான் பூர்வீகம். வைத்த பெயர் கோபிசாந்தா. சிறுவயதிலேயே, அம்மாவை அப்பா புறக்கணித்தார். அம்மாவின் தங்கையையே இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சிறுமி கோபிசாந்தாவை அழைத்துக்கொண்டு, காரைக்குடிப் பக்கம் வந்தார் அம்மா. கோட்டையூர் அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார். அங்கே, தெருமுனையில் பலகாரக் கடை போட்டார். பாதிவயிறு நிறைந்தது இருவருக்கும்!
ஆனாலும் அது வயிற்றுக்குத்தான் போதுமானதாக இருந்தது. ஆறாவதுடன் படிப்பு நின்றது. அங்கே உள்ள வீடுகளில் சிறுமி கோபிசாந்தா வேலை செய்தார். துறுதுறு சுறுசுறு என இருந்த சிறுமி கோபிசாந்தாவை, ஊரில் எல்லோருக்கும் பிடித்துப் போனது. அப்படிப் பிடிப்பதற்கு கோபிசாந்தாவின் குரல் காரணம். குரல் வழியே வந்த பாட்டு காரணம். பாட்டுக்குத் தக்கபடி ஆடி நடித்தது முக்கியக் காரணம். நடிப்பைப் பார்த்து எல்லோரும் அசந்துபோனார்கள். கடையில் சுடச்சுட வழங்கிய பலகாரங்களை விட, அவரின் பல பரிமாணங்கள் இன்னும் தித்தித்தன.
உள்ளூர் நாடகக்குழுவில் மேடையேறினார். எஸ்.எஸ்.ஆர், இவரின் நடிப்பைக் கண்டு பிரமித்துப் போனார். தன் நாடகக் குழுவில் சேர்த்துக்கொண்டார். கவியரசர் கண்ணதாசன், தான் தயாரித்த படத்திலேயே அறிமுகம் செய்து வைத்தார். இடம் மாறினார். ஊர் மாறினார். சென்னைக்கு வந்தார். முன்னதாக, கோபி சாந்தா என்ற பெயரும் மாறியது. மனோரமா என்றானார். சின்னச்சின்ன வேடங்கள். பிறகு காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரின் முகபாவங்களும் நக்கலான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தன
பின்னாளி இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர், தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர்.
தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது. அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ மனோரமாவின் பிறந்தநாளில் அவரை போற்றி புகழ்வோம்.
From The Desk கட்டிங் கண்ணையா